நானோ வா அல்லது மாருதி 800 ஓரு அலசல்



























நானோ ஸ்பெஷல்
ஒரு தனி மனிதனின் கனவாக உருவான கார், இன்று நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு கார் கனவுகளை விதைத்திருக்கிறது. உருவம் சிறிது என்றாலும் இந்திய கார் சந்தையை பன்மடங்கு பெரிதாக்கும் மந்திரக்கோலாக நானோ இன்று உருவெடுத்து வருகிறது!
ஷாப்பிங், ஸ்கூல், ஆபீஸ் என சிட்டிக்குள் சுழன்று சுழன்று சுற்றி வர வசதியாக சிறிய காராகவும், அதேசமயம் விலை குறைவான காராகவும் இருந்து வந்தது மாருதி 800. இப்போது இதைவிட விலை குறைவாக, அதே சமயம் மாருதி 800--ஐவிட அதிக இட வசதியுடன் வெளி-வந்திருக்கிறது டாடா நானோ. ஆனால், 25 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கை பெற்ற காரான மாருதி 800-ஐ இது வீழ்த்-தும் அளவுக்குத் தரமானதா? நம்பகத்-தன்மை வாய்ந்ததா? என்ற கேள்விக்கு இன்னமும் பலரிடம் தெளிவாக விடையில்லை. 'மாருதி 800 - டாடா நானோ' இந்த இரண்டில் எந்த காரை வாங்கலாம்? எதை வாங்குவது லாபம்?
லட்ச ரூபாய் இல்லை!




ஒரு லட்ச ரூபாய் கார் என்பதை நம் மனதில் இருந்து அழித்துவிட்டுத்தான் டாடா நானோவைப் பார்க்க வேண்டும். இது, ரத்தன் டாடா சொன்னது போல் ஒரு லட்ச ரூபாய் கார்தான் என்றாலும், ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாயை நெருங்கிவிடுகிறது. மேலும், இப்போதைய சூழ்நிலையில் ஏ.ஸி மற்றும் முக்கியமான வசதிகள் எதுவும் இல்லாத காரை வாங்குவது என்பது அர்த்தமற்றது. அதனால், இங்கே டெஸ்ட் செய்யப்பட்டு இருப்பது, டாடா நானோவின் விலை உயர்ந்த மாடலான LX மாடல். அதேபோல், மாருதி 800 காரிலும் ஏ.ஸி மாடலே இங்கே டெஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்டைல் மற்றும் டிசைன் இந்தியச் சாலைகள் இதுவரை பார்த்திராத அசத்தலான புதிய வடிவமைப்புடன் வெளிவந்திருக்கிறது நானோ. உலகிலேயே விலை குறைவான கார்தான் என்றாலும், பின்பக்க ரூஃப் ஸ்பாய்லர், போர்ஷே, ஃபெராரி கார்களில் இருப்பது போன்று இன்ஜினுக்கு பக்கவாட்டு ஏர் வென்ட்டுகள், சென்ட்ரல் எக்ஸாஸ்ட் பைப், பனி விளக்குகள் என சொகுசு கார்களில் இருக்கும் அம்சங்கள் நானோவில் இடம் பிடித்து இருக்கின்றன. மற்ற சிறிய கார்களைவிட இது உயரமாகவும் இருக்கிறது. இருப்பினும், காரின் பின்பக்கம் வழக்கமான டாடா கார்களைப் போன்றே இருக்கிறது.
டிசைனில் 25 வருடம் பழைமையான மாருதி 800, நிச்சயம் டாடா நானோவை வீழ்த்த முடியாது. மாருதி 800-ல் புதுமை என்று எதையும் சொல்வதற்கில்லை. பனி விளக்குகள் இருக்கும் இடத்தில் இண்டிகேட்டர்கள் மட்டுமே உள்ளன. மாருதி 800 காரை உருவாக்குவதற்கான 'ஷீட் மெட்டல் டை' பழையதாகி வருவதால், இப்போது வரும் மாருதி 800-ன் 'ஃபிட் அண்டு ஃபினிஷ்' சிறப்பாக இல்லை. பேனல்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கின்றன. செவ்வக வடிவில் இருக்கும் 800-ன் பின்பக்கம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இல்லை என்றாலும், குறை சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை.
இரண்டு கார்களிலுமே வலது பக்கம் மட்டுமே பக்கவாட்டுக் கண்ணாடி உள்ளது. 800-ல் முன்பக்கம் பானெட்டில் இருக்கும் இன்ஜின், டாடா நானோவில் பின்பக்க இருக்கைகளுக்குக் கீழே உள்ளது.
உள்ளே... உள்ளே..!
இரண்டுமே இந்தியாவின் மிக மிக விலை குறைவான கார்கள் என்பதால், பெரிய வசதிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், டாடா நானோவின் விலை அதிகமான LX வேரியன்ட், மாருதி 800 ஏ.ஸி மாடலை-விட அதிக வசதிகளைக் கொண்டு இருக்கிறது. அதேசமயம், விலையும் குறைவு. கப் ஹோல்டர், பனி விளக்கு-கள், டிஜிட்டல் டிரிப் மீட்டர், முன்பக்க பவர் விண்டோஸ் வசதிகளைக் கொண்டுள்ளது நானோ. இதில், ஏ.ஸி-யைத் தவிர வேறு எந்த வசதியும் மாருதி 800-ல் கிடையாது. ஃபிட் அண்டு ஃபினிஷ் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களின் தரம் இரண்டிலுமே ரொம்ப சுமார்!
மாருதி 800-க்குள் வசதியாக உட்கார்ந்து ஸ்டீயரிங்கைப் பிடிப்பதற்குள் பல உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இதற்கு எதிர்மாறாக உள்ளது டாடா நானோ. இதில் டிரைவிங் பொசிஷன் சிறப்பாக இருக்கிறது. 'மாருதி 800-ஐவிட டாடா நானோ சூப்பர்' என்று சொல்லக்கூடிய இன்னொரு விஷயம், காருக்குள்ளே போய் வருவது மிகவும் சுலபம். இது வயதானவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
மாருதி 800-ன் உள்ளே உட்கார்ந்ததும் முதலில் நம்மைக் கவர்வது, சாலையைத் தெளிவாகப் பார்த்து ஓட்டக்கூடிய அளவுக்கு டிரைவர் சீட் இருப்பதுதான். ஆனால், இட நெருக்கடி மிகவும் அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் உயரமானவர்கள் இதில் உட்காருவது மிகவும் சிரமம். ஆனால், டாடா நானோவில் சாலையைத் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடிகிறது என்பதோடு, இட நெருக்கடியும் கிடையாது. ஆனால், நானோவில் அகலமாக இருக்கும் 'ஏ' பில்லர், வளைவுகளில் திரும்பும்போது சாலையை மறைக்கிறது. உள்பக்க அளவுகளில் 800-க்கும், நானோவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், இருக்கும் இடத்தைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறது டாடா. சொல்லப் போனால், ஹ§ண்டாய் ஐ-10 அளவுக்கு டாடா நானோவில் இடவசதி சிறப்பாக இருக்கிறது. கால்களை நீட்டி மடக்கி உட்காரவும், ஆறடி உயரம் கொண்டவரும் தலை இடிக்காத வகையில் உட்காரும் அளவுக்கு, மாருதி 800-ஐவிட டாடா நானோவில் இடவசதி அதிகம்.
மாருதி 800-ன் 82 சிசி கம்ப்ரஸர் ஏ.ஸி, காருக்குள் ஓரளவுக்கு கூலிங்கைத் தருகிறது. ஆனால், டாடா நானோவின் ஏ.ஸி, வெறும் 60 சிசி கம்ப்ரஸரைக் கொண்டதுதான் என்பதால், பின்பக்க இருக்கைகளுக்குப் போதுமான கூலிங்கைத் தரவில்லை. மேலும், பின்பக்க இருக்கைகளுக்குக் கீழே இன்ஜின் இருப்பதால், இன்ஜின் சூடு சீட் வரை வருகிறது.
டாடா நானோவில் பின் பக்கத்தைத் திறக்க முடியாது. பின் சீட்டுக்குப் பின்னால் மூன்று பைகளை வைத்துக்கொள்ளும் அளவுக்கு (80 லிட்டர்) இடவசதி இருக்கிறது. ஆனால், மாருதி 800-ன் டிக்கி 160 லிட்டர் கொண்டது என்பதால், டாடா நானோவைவிட இரண்டு மடங்கு பொருட்களை வைத்துக்கொள்ளலாம்.
பாதுகாப்புதான் இரண்டு கார்களிலும் முக்கியமான ஒன்று. இரண்டு கார்களிலுமே ஏபிஸ் பிரேக்கோ, காற்றுப் பைகளோ கிடையாது. மாருதி 800 காரில் முன் பக்கம் டிஸ்க் பிரேக் இருக்கின்றன. மேலும், இதில் கொலாப்ஸிபிள் ஸ்டீயரிங் உள்ளது. டாடா நானோ 'க்ராஷ் டெஸ்ட்' உள்ளிட்ட பல பாதுகாப்பு சோதனை-களில் வெற்றி பெற்ற பிறகு விற்பனைக்கு வந்திருக்கிறது. மேலும், பெரிய வகை கார்களில் இருக்கும் ஒரு வசதியான, 'விபத்து ஏற்பட்டால், உடனே இன்ஜினுக்குச் செல்லும் பெட்ரோலை நிறுத்தும்' தொழில்நுட்பமும் இதில் உள்ளது. ஆனால், முன்பக்கம் பெட்ரோல் டேங்க் இருப்பது சற்று பயத்தையே ஏற்படுத்துகிறது.
இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் பர்ஃபாமென்ஸ்
3 சிலிண்டர், 6 வால்வு, முன்பக்க இன்ஜின், முன் வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது மாருதி 800. இது 796 சிசி திறனைக்கொண்டது. 5000 ஆர்பிஎம்மில் 37 bhp சக்தியும், 2500 ஆர்பிஎம்-மில் 6.01 kgm டார்க்கும் கொண்டுள்ளது. இதன் கம்ப்ரஷன் ரேஷியோ 8.8:1. பவர் டு வெயிட் ரேஷியோ ஒரு டன் எடைக்கு 55.63 bhp. இது நான்கு ஸ்பீட் கியர் பாக்ஸைக் கொண்டுள்ளது.
2 சிலிண்டர், 4 வால்வு, பின்பக்க இன்ஜின், பின் வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது டாடா நானோ. இது 624 சிசி திறனைக்கொண்டது. பின்பக்க இன்ஜின், பின் வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொண்டிருப்பதுதான் மாருதி 800-க்கும் டாடா நானோவுக்கும் இடையிலான மிகப் பெரிய வித்தியாசம். நானோவின் இன்ஜின் 5250 ஆர்பிஎம்-மில் 35 bhp சக்தியும், 4000 ஆர்பிஎம்-மில் 4.9 kgm டார்க்கையும் கொண்டுள்ளது. இதன் கம்ப்ரஷன் ரேஷியோ 9.7:1. பவர் டு வெயிட் ரேஷியோ ஒரு டன் எடைக்கு 58.3 bhp. டாடா நானோவில் இருப்பது நான்கு ஸ்பீட் கியர் பாக்ஸ்.
டாடா நானோவை ஸ்டார்ட் செய்தவுடன்... கார் சத்தத்துக்குப் பதில் 2 சிலிண்டர் மோட்டார் சைக்கிள் போன்ற சத்தத்தையே எழுப்புகிறது. மேலும், ஸ்டார்ட் செய்ததும் சிறிய அதிர்வுகளையும் கதவுகளில் உணர முடிகிறது.
மாருதி 800 காருடன் ஒப்பிடும்போது டாடா நானோவில் ஸ்டீயரிங் வீலும், கியர் லீவரும் உபயோகப்படுத்துவதற்குச் சிறப்பாக உள்ளன.
மாருதி 800-ஐவிட சிறிய இன்ஜின்தான் என்றாலும், டாடா நானோ, மாருதியின் பர்ஃபாமென்ஸ§டன் போட்டி போடுகிறது. 0-60 கி.மீ வேகத்தை மாருதி 8.09 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இதே வேகத்தை டாடா நானோ அடைய 9.13 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இது மாருதி 800-ஐவிட சுமார் ஒரு விநாடிதான் அதிகம். ஆனால், 0-100 கி.மீ வேகத்தை 25.15 விநாடிகளில் கடந்துவிடுகிறது மாருதி 800. டாடா நானோவோ 29.78 விநாடிகள் அதாவது, கிட்டத்தட்ட ஐந்து விநாடிகள் அதிகம் எடுக்கிறது. மாருதி 800-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 132 கி.மீ. ஆனால், டாடா நானோ மணிக்கு 105 கி.மீ-க்கு மேல் போகாது. இந்த வேகத்தைத் தாண்டினால், பெட்ரோல் சப்ளை கட் ஆகிவிடும். ஆனால், அதுவரை மாருதி 800-ன் பர்ஃபாமென்ஸ§க்கு நன்றாகவே ஈடுகொடுக்கிறது டாடா நானோ.
கையாளுமை மற்றும் ஓட்டுதல்

'டாடா நானோ ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது?' என்பதுதான் எல்லோருடைய கேள்வியும். நகருக்குள் ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது நானோ! ஆனால், கரடு முரடான, மிகவும் மோசமான சாலைகளில் பயணிக்கும்போது ஷாக் அப்ஸார்பரின் சத்தம் அதிகமாகக் கேட்கிறது.
நகருக்குள் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கும், நெடுஞ்சாலைகளில் வேகமாகத் திருப்புவதற்கும் டாடா நானோவே சிறப்பாக இருக்கிறது. விலை அதிகமான கார்களில் இருக்கக்கூடிய 'இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன்' டாடா நானோவில் இருப்பதே ஹேண்ட்லிங் சிறப்பாக இருப்பதற்குக் காரணம். மாருதி 800-ல் இது இல்லை. ஆனால், ஓட்டுதல் தரத்தில் 800 காரே சிறப்பாக இருக்கிறது. அதாவது, மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அதிக அலுங்கல் குலுங்கல்கள் இல்லை.
நன்றி விகடன்.