ஷாம்பு, கண்டிஷனர்களைவிட சீயக்காய் குளியல் தலைமுடிக்கு அத்தனை நல்லது. மற்ற காலங்களில் எப்படியோ, வெயில் காலங்களில் வாரத்துக்கு குறைந்தபட்சம் இரு முறையேனும் தலைக்குக் குளிக்க வேண்டும். தினமுமே தலைக்குக் குளித்தால் ஆஹா... ஓஹோ! ஆனால், தலையில் நீர் கோக்காமல் காற்றாடக் காயவிடுங்கள். வியர்வையுடன் இந்த ஈரப்பதம் சேர்ந்தால், தலைவலி உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம்.


வழக்கத்தைவிட அதிகமாகவே தண்ணீர் பருகுவீர்கள். வெறுமனே தண்ணீராக மட்டும் குடிக்காமல் உப்பு அதிகமாகச் சேர்த்த நீர் மோர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். வியர்வை மூலமான சத்துப் பொருட்கள் இழப்புக்கு அவை ஈடுகொடுக்கும்.


தர்பூசணி, நுங்கு, பன்னீர் திராட்சை என நீர்ச் சத்து அதிகமுள்ள பழங்களைச் சாப்பிடலாம். இவற்றையெல்லாம்விட பொட்டாசியம், சோடியம் சத்துடன் குளூகோஸூம் அதிகமுள்ள இளநீர் ஆல் டைம் அமிர்தம்.


பகலில் கொளுத்தும் வெயில் இரவுகளில் தணியும்போது 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முகச் சுருக்கங்கள் ஏற்படலாம். மிருதுவான மாய்ச்சரைஸர்கள் தேய்த்துக்கொள்வது நல்லது.


பழ வகைகளை ஜூஸ் ஆக்கிச் சாப்பிடாமல் நறுக்கிச் சாப்பிடுவது நல்லது. சுத்தமான நீரில் தயாரிக்கப்படாத ஐஸ் கட்டிகள் கலந்து தயாரிக்கப்படும் பழரசங்களைச் சாப்பிடாமல் தவிர்ப்பதே ஆரோக்கியம்.


தொண்டை வறண்டு தாகமெடுக்கும் நேரத்தில், ஐஸ் போட்டு ஜில்லென்று தண்ணீர் குடிப்பது அப்போதைக்கு இதமாகத்தான் இருக்கும். ஆனால், அது தாகத்தை மட்டுப்படுத்தாமல் ஜலதோஷம், வறட்டு இருமல், தொண்டை வறட்சி, சைனஸ் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக்கும். சுத்தமான நீரை நிறையக் குடித்தாலே முகப்பரு, தோலில் ஏற்படும் நிற மாற்றங்களைத் தடுக்கலாம்.


இளம் பெண்கள் முடிந்தவரை மேக்கப் குறைவாகப் போட்டுக்கொள்ளுங்கள். அதீத மேக்கப் க்ரீம்கள் வியர்வை வெளியேறும் துளைகளை அடைத்துவிடும்.
மாலையில் சூரியன் மறைந்து இருள் சூழும் சமயம், ஜன்னல்களில் ஈரமான திரைச்சீலைகளைத் தொங்கவிடுங்கள். அச்சமயங்களில் வெளியிலிருந்து வீட்டுக்குள் வரும் வெப்பக் காற்றை அந்தத் திரைச்சீலைகள் கொஞ்சம் குளிர்ச்சியாக்கும்.


ஃப்ரிஜ், ஐஸ் கட்டி, மெஷின்கள் மூலம் குளிரூட்டப்பட்ட குடிநீரைவிட மண்பானைக் குடிநீர்தான் குளிர்ச்சியானதும் சுகாதாரமானதும் ஆகும்.
டீ, காபியை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள். முடியாதவர்கள் லெமன் டீ, மிதமான குளிர்ச்சியில் ஐஸ் காபி குடிக்கலாம்.


வெயில் நேரத்தில் வெளியே அலைபவர்கள் தாகமெடுத்தாலும் செல்லுமிடங்களில் கிடைக்கும் தண்ணீரின் தரம் குறித்து தயங்கி தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். அப்படி மட்டும் செய்யவே செய்யாதீர்கள். கையோடு ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டு செல்வதன் மூலமோ, தரமான மினரல் வாட்டர் பாட்டில்கள் மூலமோ தாகத்தைத் தணித்துக்கொண்டே இருங்கள்.


சலூன்களில் இருப்பது போன்ற ஸ்பிரேயர்களில் நல்ல தண்ணீரை நிரப்பி வைத்துக்கொண்டு, அவ்வப்போது முகத்தில் தெளித்துக்கொள்ளலாம். இது உடல் சூட்டைத் தணிப்பதோடு, முகத்தையும் மெருகு குலையாமல் பராமரிக்கும்!


நன்றி விகடன்.