இந்தியாவில் தீவிர நானோ ஜுரம் பரவிக்கொண்டு இருக்க... ஜெர்மனியில் நானோவுக்குப் போட்டியாக வேறொரு காரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அது, வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் 'எல் 1' என்ற காருக்காக அப்படி என்ன இருக்கிறது இந்த காரில்? 2002-ம் ஆண்டு 'எல் 1' என்ற கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியது வோக்ஸ்வாகன். ஆனால், இந்த கார் 2010-ல்தான் விற்பனைக்கு வரும் என்று அறிவித்து இருந்தது.




அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் இந்த கார், ஒரு லிட்டர் டீசலுக்கு 100 கி.மீ மைலேஜ் தருமாம்! அதனால்தான் இதற்கு 'எல் 1' என்று பெயர். முழுக்க முழுக்க மைலேஜை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த கார்.

இவ்வளவு அதிக மைலேஜ் கிடைக்குமா? நம்பும்படியாக இல்லையே என்பவர்கள், இதன் தொழில்நுட்பம் அறிந்தால் அசந்து போவார்கள்.

முதலில், அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்றால் எடை குறைவாக இருக்க வேண்டும்; ஏரோடைனமிக்ஸ் முறைப்படி வடிவமைத்திருக்க வேண்டும். இந்த இரண்டுமே இந்த காரில் சாத்தியமாகி இருக்கிறது. அதாவது, காரின் மொத்த எடையே 290 கிலோதான்.

எடை குறைந்தால் பாதுகாப்பு பலவீனமாகிவிடுமே என்ற கேள்வி எழலாம். உண்மைதான். ஆனால், அதற்காகவே பல புதிய உத்திகளைக் கையாண்டு இருக்கிறார்கள். மெக்னீஷியத்தில் உருவாக்கப்பட்ட சேஸியும், எஃப் 1 கார்களில் பயன்படுத்தப்படும் கார்பன் ஃபைபர் பாடியும் எடை குறைவு என்றாலும் மிக உறுதியானவை. மேலும், ஆல் அலுமினியம் இன்ஜின், உலோக கலவைகளால் உருவாக்கப்பட்ட டிரான்ஸ்மிஷன் பாகங்கள், காம்போஸிட் மெட்டீரியலால் உருவான வீல்கள் என காரின் மொத்த பாகங்களும் எடை குறைவான, ஆனால் உறுதியான பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

பெயின்ட் அடித்தால் காரின் எடை கூடிவிடும் என்பதற்காக, பெயின்ட் செய்யப்படவில்லை. மேலும், கார் எதன் மீதாவது மோதினாலும், காருக்கும் மோதுகிற வாகனத்துக்கும் குறைவான சேதம் ஏற்படும் வகையில் இதன் பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிங்கிள் சிலிண்டர், 299 சிசி அளவு மட்டுமே கொண்ட டீசல் இன்ஜினில் 8.4 பிஹெச்பி திறன் கிடைக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (டிஎஸ்ஜி) கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ.

இன்னொரு முக்கியமான விஷயம், போர் விமானத்தை நினைவுப்படுத்தும் இதன் வடிவம், குறைவான காற்றுத் தடுப்புடன் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்க ஏதுவாக உள்ளது. இந்த காரில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. காரில் இருப்பது ஒரே கதவுதான்... போர் விமானத்தில் ஏறுவது போல, மேல் பக்கம் திறந்து மூடுவது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இந்த எல் 1.

அதிக மைலேஜ் தரும் கார் என்பதால், டேங்க் கொள்ளளவு 6.5 லிட்டர் மட்டுமே! ஆனால், பூட் பேஸ் 80 லிட்டர். ரியர் வியூ கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டேஷ் போர்டில் இருக்கின்ற இரண்டு மானிட்டர்களிலும் பின்புறம் தெரியும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த காரின் விலை எவ்வளவு இருக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி? நிச்சயம் நானோவுடன் இதனால் போட்டி போட முடியாது. காரணம், இதில் உள்ள பாகங்கள் அனைத்துமே மிக காஸ்ட்லியான பாகங்கள்!


நன்றி விகடன்.