புதுப் புது தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துவதில் ஜப்பானுடன் போட்டியே போட முடியாது. இதில், டொயோட்டாவின் புதிய தொழில்நுட்பம் எல்லோரையும் 'அட' போட வைத்திருக்கிறது.


'ஐ-ரியல்' பார்ப்பதற்கு ஹை-டெக் வீல் சேர் போல் இருக்கிறது. ஆனால், இது சாதாரண வீல் சேர் இல்லை. அடுத்த தலைமுறைக்கான ஹை-டெக் பர்சனல் வாகனம்!

கார், பைக் செல்ல முடியாத இடங்களுக்கு அதாவது பெரிய தொழிற்சாலை, கல்லூரி, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ§களுக்குள் சுற்றி வர இதுதான் சரியான சாய்ஸ் என்கிறது டொயோட்டா.

எலெக்ட்ரிக் பேட்டரியின் மூலம் இயங்கும் மோட்டார், இதன் வீல்களுக்கு சக்தியை அளிக்கிறது. இதன் சீட்டில் அமர்ந்ததுமே இரு கைகளை வைக்கும் இடத்தில் ஐ-ரியலை இயக்கத் தேவையான கன்ட்ரோல்கள் உள்ளன. இதைக் கொண்டு திராட்டில், பிரேக், ஸ்டீயரிங் ஆகியவற்றை இயக்க முடியும். இதை இரண்டு 'மோடு'(mode)-களில் இயக்க முடியும். வாக்கிங் மோடில் இயக்கினால் வீல் சேர் போல நிமிர்ந்து அமர்ந்தவாக்கில் பயணிக்கலாம். இந்த மோடில் ஐ-ரியலின் நீளம் குறைவாக இருப்பதால், மிகக் குறுகிய இடங்களில்கூட சுலபமாகச் செல்ல முடியும். 'க்ரூஸ் மோடில் இயக்கினால், பின்பக்க வீல் பின்னே நகர்ந்து நீளத்தை அதிகரிப்பதோடு, பின்பக்கம் சாய்ந்து அமர்வதுபோல ஆகிவிடுகிறது. இந்த 'மோடு' வேகமாகச் செல்வதற்குப் பயன்படுகிறது. மணிக்கு 32 கி.மீ வேகம் வரை இதில் செல்லலாம். இந்த வேகத்தில் வளைவுகளில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் போல, இதன் வீல்கள் திரும்பும் திசையில் வளைந்து ஐ-ரியல் கவிழ்ந்துவிடாமல் காக்கிறது.

மேலும், டச் ஸ்கிரீன் கொண்ட சிறிய கம்ப்யூட்டரும், ஜிபிஎஸ் சிஸ்டமும் இதில் உள்ளன. உதாரணத்துக்கு, காபி ஷாப் எங்கே இருக்கிறது என்று கேட்டால், அந்த இடத்துக்கு அதுவே வழி காட்டும்.

இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால், 1.5 லட்சம் ரூபாய் விலையில் 2010-ம் ஆண்டு ஜப்பானில் 'ஐ-ரியலை' அறிமுகம் செய்ய இருக்கிறது டொயோட்டா!


நன்றி விகடன்.