''ஜீரணிக்கக் கடினமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் தமிழ் ஈழப் போராட்டக் களத்தில்அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க முடியும்!'' என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள், இலங் கைக்கு

வெளியே உள்ள புலி இயக்கப் பிரதிநிதிகள். பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது குறித்து மெள்ள மெள்ள இவர்கள் விவாதிக்கத் தொடங் கியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசு பத்மநாபன், 'தேசியத் தலைவர் காட்டிச் சென்ற வழியில் அரசியல் ரீதியில் போராட்டத்தைத் தொடருவோம்' என சொல்லிவருகிறார். இதற்கிடையில், ''இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்றால், சிங்கள அரசின் மூலம்தான் செய்ய வேண்டும். சரிநிகர் சமமான அந்தஸ்தோடு தமிழர்கள் வாழ்வதற்கான மாற்று வழிமுறைகளைத்தான் விரைவுபடுத்த வேண்டும்!'' என்று தமிழக முதல்வர் கூறியிருப்பது... புலிப் பிரதிநிதிகள் மத்தியில் கடுமையான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

''தலைவர் பிரபாகரன் காட்டிய பாதையில் தமிழ் ஈழம் அடைந்தே தீருவோம்!'' என்று தங்களுக்குள் உறுதியோடு முழங்கிக் கொள்ளும் இவர்கள், தனது கடைசித் தருணத்தில் பிரபாகரன் வெளியிட்ட லட்சியம் குறித்தும் விறுவிறுவென விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வழியிலிருந்து நமக்கும் கசிந்து வந்தன பிரமிப்பூட்டும் அந்த 'கடைசித் தருணÕ தகவல்கள்.


கலங்க வைத்த கடைசி உரை!

நவம்பர் 27 மாவீரர் தினம் மற்றும் தான் மிகவும் நேசித்த போராளிகளின் நினைவு தினம் போன்ற நாட்களில் மாவீரர்கள் துயிலும் இடங்களில் மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் பிரபாகரன். இப்படி வருடத்துக்கு ஓரிரு முறைதான் இலங்கைத் தமிழ் மக்கள் பிரபாகரனை நேரில் பார்க்க முடியுமென்றாலும், தன் தளபதிகளை எப்போதும் மக்களோடு மக்களாக அவர் இருக்கச் செய்திருந்தார். தான் சொல்ல விரும்பும் கருத்துகளை, செய்திகளை அந்தத் தளபதிகள் மூலமாக மக்களிடம் உடனுக்குடன் அவர் சேர்த்து வந்தார்.

ஆனால், 2007-ல் நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கியபோது... கிளிநொச்சி, பரந்தன், ஆனை யிறவு என வரிசையாக வீழ்ச்சி ஏற்பட... புலிகளின் தளபதிகளைக்கூட மக்களால் சரிவர சந்திக்க முடியாத நிலை உண்டானது. இருந்தாலும், பிரபாகரன் தங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக் கையில்தான் மொத்த மக்களும் புலிகள் பின்னால் தொடர்ந்து அணிவகுத்திருந்தனர்.

2009 மார்ச்சில் மிகவும் உக்கிரமாக இறுதிக் கட்டப் போர் தொடங்கியபோது, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டும் இரண்டரை லட்சம் மக்கள் இருந்தனர். இடைவிடாத போரி னால், நம்பிக்கை இழந்திருந்த அந்த மக்களை இக்கட் டான அந்தத் தருணத்திலும் - நீண்ட இடைவெளிக்குப் பின் - சந்தித்திருக்கிறார் பிரபாகரன். இலங்கை மண்ணிலிருந்து வெளியேறி வேற்று நாட்டில் அடைக்கலம் புகுந்துவிட்ட தமிழ்ச் சகோதரர் ஒருவர் அதுகுறித்து உணர்ச்சிவசப்பட்டு நம்மிடம் பகிர்ந்துகொண்டார் -

''கடந்த ஏப்ரல் மாசக் கடைசியில முள்ளிவாய்க்காலை ஒட்டியிருந்த ஒரு மருத்துவமனைப் பக்கம் தேசியத் தலைவர் (பிரபாகரன்) எங்களைச் சந்திக்கப் போறதா ராத்திரியில வந்து புலிகள் சொன்னாங்க. விடியுற நேரத்துல தேசியத் தலைவர் தன் மகன் சார்லஸ் ஆன்டனியோட வந்து சந்திச் சார். 'இப்படியரு இக்கட்டான நிலையில் மக்களைத் தவிக்கவிட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'னு எடுத்த எடுப்பிலேயே கலங்கினார். 'இந்தப் போர் இப்போதைக்கு நமக்கு எதிராக முடிவுற்றாலும், அடுத்த 20 வருடங்களுக்கு இயக்கம் செல்ல வேண்டிய பாதை தெளிவாகவே இருக்கு. அதனால், இப்போதிருப்பதைவிடப் பல மடங்கு வேகத்தோடு போராடப் போகிறோம். நீங்கள் என்னுடன் இருந்தால், இதைவிடப் பெரிய போராட் டங்களை என்னால் நடத்த இயலும்'னு தலைவர் பேசினார்.

போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருந்ததால், அப்ப எங்க மக்களுக்கு சாப்பாடுகூடக் கிடைக்காமலிருந்தது. அதைத் தலைவர் கிட்ட சொன்னதும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசியும், அரை கிலோ மீனும் தரும்படி தன் தளபதிகளுக்கு உத்தரவு போட்டார். இறுதியா கிளம்பறப்போ எங்க மக்கள்ல சிலர், 'சூழலை மனசில் வச்சு தலைவர் வெளியில போயிடணும். போரை வேறு வாய்ப்பான தருணத்தில் தொடரலாம்'னு சொன்னாங்க. தலைவர் அதை ஏற்கலை. 'இறுதிப் போரில் எனக்கு வீரச்சாவு வந்தாலும் அது என் மண்ணில், என் மக்களுடன்தான்'னு உறுதியா சொல் லிட்டுக் கிளம்பிட்டார். எங்களுக்குக் கண்ணீர் வந்துருச்சு. இப்போது தலைவரைப் பற்றி மாறுபட்ட செய்திகள் வந்துகொண்டிருந்தாலும்... அவருடைய அந்த இறுதி உரை இப்போ நினைத்தாலும் எங்களைக் கலங்கடிக்கிறது...'' என்றார் குரல் விம்ம.

சரணடைந்த புலிகள்... சாதுரியக் கட்டளை!

இறுதிப் போர் முடிவுற்றதாக இலங்கை ராணு வம் அறிவித்த, மே 18-ம் தேதி ராணுவத்திடம் கிட்டத்தட்ட 13 ஆயிரம் புலிகள் சரணடைந்தனர். 'முடிந்த வரை போராடி, முடிவில் வீரச்சாவைத்தழுவு' என்பதுதான் புலிகளுடைய கொள்கை. அப்படியிருக்கும் நிலை யில் போராளிகள் சரணடைந்த விவ காரம், உலகம் முழுவதிலுமுள்ள புலி ஆதரவாளர்கள் மத்தியில் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் பார்க்கப் பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து சில விஷயங்களை விவரிக்கிறார்கள், ஐரோப்பாவிலுள்ள புலி ஆதரவாளர்கள்.

''போராளிகளில் நாங்கள் முக்கியமாகக் கருதிய சிலர்கூட சரணடைந்தார்கள் என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, வவுனியா மற்றும் மன்னாரில் உள்ள வதை முகாம்களில் இருக்கும் அவர்களுடன் சிலர் பேசிய பிறகு, தற்போது சரணடைந்த பின்னணியைத் தெரிந்து தகவல் அனுப்பியுள்ளார்கள். அதாவது, மே முதல் வாரத்தில் இந்தியத் தேர்தலுக்காக, போர் உக்கிரம் சற்றே தணிந்திருந்த நிலையில் முக்கியமான தளபதிகளுடன் தலைவர் ஆலோ சனை நடத்தியிருக்கிறார். அப்போது, 'இறுதிக்கட்டத்தில் நம்மில் இருக்கும் 15 ஆயிரம் பேரும் கரும்புலிகளாக மாறி, ராணுவத்துக்குப் பேரழிவை ஏற்படுத்துவோம். நம்மிடம் இருக்கும் 300 டன் வெடி பொருட்களுக்கும் ராணுவத்தை இரையாக்குவோம்'னு தளபதிகள் சிலர் வீராவேசமா பேசியிருக்காங்க.

தலைவரோ வேறுவிதமாக யோசித்திருக்கிறார். தமிழ் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய மூன்று விஷயங்களை முன்வச்சு மூன்று தசாப்த காலங்களாக வெற்றிகரமான ஒரு ஆயுதப் போராட்டம் நடத்திய போதெல்லாம் கிடைக்காத மக்கள் ஆதரவு, சமீபத்திய சில அரசியல் நகர்வுகளின் மூலமாகக் கிடைக்கத் துவங்கியதை தலைவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். 'உலகம் முழுவதும் இப்போது நம் போராட் டத்துக்குக் கிடைத்திருக்கும் ஒட்டு மொத்த கவனம் இதற்குமுன் எப்போதும் கிடைத்ததில்லை. அதற்குக் காரணம், நாம் மட்டுமே போராடிக் கொண்டிருந்த நிலைமை மாறி... தமிழகம் உள்பட உலகின் பல பகுதிகளிலும் அரசியல்ரீதியாக நமக்காக பலரும் கடுமையாக வாதிடத் தொடங்கியிருப்பதுதான். இந்த எழுச்சியை அணையாமல் முன்னெடுத்துச் செல்ல, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்' என்று தலைவர் சொல்லி யிருக்கிறார். அதனால்தான் இறுதிப் போர் உக்கிரமாக நடந்த தருணத் திலும், அரசியல் பிரிவைச் சேர்ந்த போராளிகளை அவர் களத்தில் இறக்க முன்வரவில்லை. ராணுவரீதியாக இயக்கம் வீழ்ச்சியுற்ற பிறகும் அரசியல்ரீதியாக இயக்கம் தொடர்ந்து செயல் பட்டால்தான்... பிறிதொரு தருணத்தில் மறுபடியும் ஆயுதப் போரைத் தொடர முடியும் என்று அவர் நினைத்திருக்கிறார். அதனாலேயே, அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் வேறு வழியில்லாத சூழ்நிலையில், சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தாலும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் போட்ட கணக்குக்கு மாறாக... அவர்களில் பலரை சிங்கள ராணுவம் வெறித்தனமாக சுட்டுக் கொன் றிருக்கிறது!'' என்று கூறுகிறார்கள் இந்தப் புலி ஆதர வாளர்கள்.

பிரபாகரனின் இறுதி வழிகாட்டுதலின்படிதான் புலிகள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசியல்ரீதியாக முடுக்கி விடுவதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாக, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம் செல்வராசு பத்மநாபன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற முயற்சியும்கூட அதனடிப்படையில்தான் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

''மேற்கொண்டு போருக்கு வழியில்லை என்றாகி விட்டால், ஐக்கிய இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் மூலம் ஒரு தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதும், தனக்கு நம்பிக்கையானவர்களிடம் தலைவர் பிரபாகரன் வெளிப் படுத்திவிட்டுச் சென்றுள்ள ஒரு எண்ணம். இதை தற்போது தங்கள் பிடியில் உள்ள பொட்டு அம்மான் மூலமாக சிங்கள அரசு அறிந்திருக்கவும் கூடும். அத்தகைய அரசியல் ரீதியான பங்கேற்புக்கு எதிர்காலத்தில் வரக்கூடியவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அழிக்கும் வேலை யில் சிங்கள ராணுவம் இறங்கியிருக்கிறது. மன்னாரில் 2 மற்றும் வவுனியாவில் 3 முகாம்களில் இருக்கும் 13 ஆயிரம் பேரையும் கொஞ்சம் கொஞ்சம் பேராகப் பிரித்து நிறுத்துகிறார்கள். மூகமுடிஅணிந்த சிலரை அங்கே அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் வரிசைப்படுத்தி நிற்க வைக்கின்றனர். முகமூடிக்காரர்கள் அடையாளம் காட்டும் நபர்கள், கேம்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியில் அழைத்துச் செல்லப் படுகிறார்கள். அதன்பிறகு, அவர்களின் நிலை பற்றி தெரிவதேயில்லை!'' என்று சொல்லி அதிர வைக் கிறார்கள், இலங்கைத் தகவல்களை உடனுக்குடன் பெறக்கூடிய சில புள்ளிகள்.


பிரபாகரன் சொன்ன யூத உதாரணம்!

''இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருந்த தருணத்தில் வெளியான கருத்துக் கணிப்புகள் ஆட்சி மாற்றம் உண்டாகுமென கூறியிருந்தன. அப்படி வரும்பட்சத்தில், இந்தியாவிடமிருந்து இலங்கை ராணுவத்துக்குக் கிடைக்கும் உதவிகள் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடு இருந்தார் பிரபாகரன். அந்த சமயத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் மூலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஒருவர் பிரபாகரனைச் சந்தித்தார்.

அப்போது, 'இறுதிக்கட்டப் போரில் எனக்கு வீரச்சாவு ஏற்பட்டாலும் பரவாயில்லை. இந்த மண்ணைவிட்டு அகலப் போவதில்லை' என்று கம்பீரமாகச் சொன்ன பிரபாகரன், 'குறிப்பிட்ட தருணத்தில் உலகிலுள்ள தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துகளாகத் தானே பேசி பதிவு செய்து வைத்திருந்த சி.டி-யை அவரிடம் கொடுத்திருந்திருக்கிறார். 'தக்க தருணம் வரும்போது, அந்த சி.டி-க்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்' என்றாராம். 'உலகத் தமிழர்களே... மனம் தளர வேண்டாம்' என்ற அறைகூவலுடன் அதில் பிரபாகரன் உரை தொடங்குவதாகத் தெரிகிறது.

'''உலகப் போரின்போது யூத இனத்துக்கு நேர்ந்த சோதனைகளை வரலாறு என்றும் மறக்காது. நாடு கடந்த அகதிகளாக பல ஐரோப்பிய நாடுகளில் அடைக் கலமானது யூத இனம். சொந்த மண்ணைவிட்டு அகன்று வந்தபோது, ஆயுதப் போராட்டம் நடத்த முடியாமல் போனாலும்... யூதர்கள் தங்களுக்கென ஒரு நேரம் வருமெனக் காத்திருந்தனர். அதுவரை பொறுமையாகவும் கடுமையாகவும் உழைத்தனர். தங்களுக்கென ஒரு வங்கியைத் தொடங்கிய யூதர்கள், அந்த வங்கியில்தான் தங்கள் பணத்தைப் போட்டு வைத்தார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு, இஸ்ரேலின் பெரும்பகுதியை மீட்டனர்.

அத்தகைய வரலாற்றை நாமும் நிகழ்த்த வேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தமிழ் ஈழம் அமைவதற்கு ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் நிலை உருவாகவேண்டும்... உருவாகும்! அது ஈழத் தமிழர் களுக்கான நாடாக மட்டும் இல்லாமல்... உலகத் தமிழர்கள் அனைவருமே நேசம் கொண்டாடும் நாடாக இருக்க வேண்டும். 'புலிகளின் தாகம்... தமிழீழத் தாயகம்' என்று இதுவரை ஒலித்துவந்த நம் கோஷம், 'தமிழர்களின் தாகம்... தமிழீழத் தாயகம்' என்பதாக மாற வேண்டும்' என்று அந்த சி.டி-யில் பிரபாகரன் உரை யாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

''புலிகளுக்கான அரசியல்ரீதியான புதிய கட்டு மானத்தை உலகின் வெவ்வேறு நாடுகளில் உருவாக்கும் வேலை விரைவாக நடக்கிறது. வருகிற நவம்பர் 27 மாவீரர் தினத்துக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இதில் ஏற்படும். அதுவரை பிரபாகரனின் கடைசி உரை அடங்கிய சி.டி. பத்திரமாகப் பாதுகாக்கப்படும்..'' என்கிறார்கள் நார்வேயிலுள்ள புலி ஆதரவாளர்கள்.


நன்றி ஜுனியர் விகடன்