நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய காரை, சில நாட்கள் கழித்துத் திறந்து பார்க்கும்போது, அதில் அழுகிய நிலையில் நிர்வாணமாக ஓர் பிணம் கிடந்தால் எப்படி இருக்கும்?

சித்தபிரமை பிடித்தவர் போல இருக்கிறார், பெண்ணாடத்தைச் சேர்ந்த சேது முத்துக்குமாரசாமி. அவர் மட்டுமல்ல... ஊரே மீள முடியாத திகிலில் ஆழ்ந்து கிடக்கிறது.

நடந்தது என்ன..? இதோ அவரே விளக்கு-கிறார்... ''நான் எப்போதாவது ஒரு முறைதான் காரைப் பயன்படுத்துவேன். மற்ற நேரங்களில் என் வீட்டுக்கு அருகே உள்ள கோயில் முன்பு காரை நிறுத்திவைப்பேன். கடந்த மே 27-ம் தேதி காரில் வெளியே போய் வந்த நான், எப்போதும் போல காரை கோயிலுக்கு அருகே நிறுத்தி, ரிமோட் மூலம் லாக் செய்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

அதன் பிறகு எனக்குப் பல நாட்கள் கார் தேவைப்படவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் இரண்டாம் தேதி வெளியே செல்வதற்காக காரை எடுக்கச் சென்-றேன். காரை நோக்கி நடக்கும்போதே, 'காருக்கு அருகே குடலைப் புரட்டும் துர்நாற்றம் எடுக்கிறது' என்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். எலி ஏதாவது செத்துக் கிடக்கும் என்று நினைத்தபடி காரின் கதவைத் திறந்தேன்... காருக்குள்ளே நான் கண்ட காட்சி அதிர வைத்தது. பூட்டிய காருக்குள் நிர்வாணமாக ஒரு ஆண் பிணம் கிடந்ததைப் பார்த்து செய்வதறியாது திகைத்துவிட்டேன். அந்தப் பதற்றத்துடனேயே போலீஸ§க்கு போன் செய்தேன். போலீஸார் விசாரணை செய்தார்கள்... நடந்ததைச் சொன்னேன். காரின் உள்ளே இருந்த பிணம், அடையாளம் காண முடியாத அளவுக்குப் புழு பிடித்து சிதைந்து போய்விட்டது... இது எப்படி நிகழ்ந்தது என்றே புரியவில்லை!'' என்றார் பயம் அகலாமல்.

நாம் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணனிடம் இது பற்றிக் கேட்டோம். ''காரை நிறுத்தி விட்டுச் செல்லும்போது ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்திருக்கிறார். லாக் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் அன்-லாக் பட்டனையேகூட அழுத்தி இருக்கக்கூடும். ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும், அன் - லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. என்றாலும், இதைக் கவனமாகக் கேட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமல்ல, முத்துக்குமாரசாமி கார் போன்று செக்யூரிட்டி சிஸ்டம் பொருத்தப்பட்ட கார்களை கள்ளச் சாவி போட்டுத் திறந்தால்கூட ஒரிஜினல் சாவி இல்லாமல் அதை ஐம்பது மீட்டருக்கு மேல் ஓட்டிக்கொண்டு போக முடியாது. இந்தக் காரணத்தினாலேயேகூட காரின் உரிமையாளரான முத்துக்குமாரசாமி அலட்சியமாக இருந்திருக்கலாம்.

இறந்து கிடந்தவரின் உடலைப் பரிசோதனை செய்ததில், வயிற்றில் கலப்படமான உணவு சாப்பிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. சம்பவத்தன்று, காரைத் திறந்து உள்ளே போயிருப்பார், உள்ளே சென்று கதவை மூடியதும் அது லாக் ஆகி இருக்கும். உள்ளே இருந்து கார் கதவைத் திறப்பது எப்படி என்று தெரியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் போராடி இறந்துள்ளார்'' என்றார் கண்ணன்.

மனிதக் கைகளில் ஆறாவது விரலாக நீண்டுவிட்டது ரிமோட். எலெக்ட்ரானிக் உபகரணங்களில் தவறே நிகழாது என கூற முடியாது. காரை ரிமோட் மூலம் லாக் செய்தவர், அனைத்துக் கதவுகளும் ஒழுங்காகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று காரின் கதவை இழுத்து ஒருமுறை சோதித்துப் பார்த்திருந்தால், ஒரு உயிர் பலியை தவிர்த்திருக்கக் கூடும்!