ஆனித்திருமஞ்சனம்



நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திரநட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம்.

சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும்.அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும்.

ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும்.அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது.





தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.

தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நடு இரவாகிவிடும். இந்த மண்டபத்திற்கு ராஜசபை என்றும், அரசம்பலம் என்றும் பெயர். இரவு நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில் தங்குவார்கள்.

மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்.






பஞ்ச சபைகள்

ரத்தின சபை - திருவாலங்காடு
கனகசபை - சிதம்பரம்
ரஜிதசபை (வெள்ளி சபை) -மதுரை
தாமிரசபை - திருநெல்வேலி
சித்திரசபை - திருக்குற்றாலம்
பஞ்ச தாண்டவ தலங்கள்
ஆனந்த தாண்டவம் - தில்லை, பேரூர்
அஜபா தாண்டவம் - திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் - திருவாலவாய்
ஊர்த்துவ தாண்டவம் - அவிநாசி
பிரம்ம தாண்டவம் - திருமுருகன்பூண்டி
காட்டிடை ஆடும் கடவுள்
திருவாலங்காடு - ஆலங்காடு
திருவெண்பாக்கம் - இலந்தைக்காடு
திருவெவ்வூர் - ஈக்காடு
திருப்பாரூர் - மூங்கிற்காடு
திருவிற்கோலம் - தர்ப்பைக்காடு

ஆனந்தத் தாண்டவம்

படைத்தல் -காளிகாதாண்டவம் - திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல் - கவுரிதாண்டவம் -திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல் -சங்கார தாண்டவம்- நள்ளிரவில்.
மறைத்தல் - திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை.
அருளல் - ஊர்த்துவ தாண்டவம் -திருவாலங்காடு, ரத்தினசபை.

ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும்
ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.

நடராஜர் அபிஷேகங்கள் சித்திரை திருவோணம், உச்சிக்காலம் (முற்பகல் 10 மணிக்கு மேல் பிற்பகல் 2 மணிக்குள்.)

ஆனி உத்திரம், பிரதோஷக் காலம் (மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணிக்குள்.)

ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, மாலைச்சந்தி (மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள்) (இந்த ஆண்டு ஆனி உத்திர தரிசனம் 7.7.2011 காலை)
புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி அர்த்தஜாமம் (இரவு 9.30 மணியிலிருந்து 11 மணிக்குள்)

மார்கழி திருவாதிரை, உஷத்காலம் (அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள்.)

மாசி வளர்பிறை சதுர்த்தசி, காலை சந்தி (காலை 6 மணி முதல் 9 மணிக்குள்.)

பகல் அபிஷேகங்களுக்கு மாலையும்; இரவு அபிஷேகங்களுக்கு மறுநாள் உதயமும் தரிசன காலமாகும்.

தில்லையில் ஐந்து சபைகள்



சித்சபை

சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை.இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம்.பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம்,சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.

கனகசபை

சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.

தேவசபை

பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.

நிருத்தசபை

தேர் அம்பலம்,நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.

ராஜசபை

ஆயிரங்கால் மண்டபம். மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.

நவதாண்டவம்

தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம்.

மடவார் விளாகம் நடராஜர்

ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.

மேலைச் சிதம்பரம்

பேரூர் பட்டீஸ்வரர்,சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளியமையால் இறைவனை ‘‘குடகத்தில்லை அம்பலவாணன்" என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும்.

சண்முகர் நடராஜாவாக

அருணகிரிநாதர் ஆறுமுகப் பெருமானிடம் நடராஜர் நடனக் கோலத்தைக் காட்டுமாறு வேண்டினார். ஆறுமுகம் ஆடிக்காட்டியதை நினைவு கூரவே திருச்செந்தூர் பெருவிழாவில் ஏழாம்நாள் மாலை சண்முகர் சிவப்பு சாத்தி பின்புறம் நடராஜர் கோலம் கொள்ளுகிறார்.