''ஒரு நல்ல கார் வாங்கணும். வாங்கப் போகும் காரால் நமக்கு மரியாதை கூடணும். அதே சமயம், அது நல்ல மைலேஜ் தரக்கூடிய காராகவும் இருக்கணும். விலையும் அதிகம் இருக்கக் கூடாது. குடும்பத்தோட போகும் அளவுக்கு இட வசதியாகவும் இருக்கணும். எந்த கார் நமக்குச் சரிப்பட்டு வரும்?'' - கார் வாங்குவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, இப்படிப் பல கேள்விகள் நம் மனசுக்குள் தோன்றுவது இயல்பு.

எந்த காரை வாங்குவது என்கிற குழப்பத்திலேயே பலருக்குச் சேர்த்துவைத்து இருக்கும்

காசில் பாதி கரைந்து விடும். வேறு சிலரோ - நண்பர்கள், உறவினர்களின் கார்களைப் பார்த்து மதி மயங்கி, தங்கள் தேவைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத காரை வாங்கி விடுவார்கள்.

பெட்ரோல் கார் தேவை உள்ளவர்கள் டீசல் கார் வாங்கி அவஸ்தைப்படுவதும், வீட்டில் நான்கு பேர் மட்டுமே உள்ளவர்கள் 8 பேர் பயணிக்கக்கூடிய எஸ்யூவி காரை வாங்கிவிட்டு பெட்ரோல், பராமரிப்புச் செலவுகளைக் கண்டு பயந்து... வாங்கிய காரை விற்றுவிடும் நிலைமைக்கும் வருவதும் எதனால்?

நமக்குச் சரியான கார் எது என்று கண்டு பிடித்து வாங்கினால்தான் காருக்கான முழுப் பயனையும் அடைய முடியும். ஆடி, பிஎம்டபிள்யூ துவங்கி டாடா நானோ வரை இந்தியாவில் இப்போது மொத்தம் 120 மாடல் கார்கள் விற்பனை ஆகின்றன. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட இன்ஜின் வகைகளும், ஏராளமான வேரியன்ட்டுகளும் இருக்கின்றன. உங்கள் முன்னே அணிவகுத்து நிற்கும் நூற்றுக்கணக்கான கார்களில் உங்கள் தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் பொருந்தி வரக்கூடிய கார் எது?


வாங்க... கார் வாங்கப் போகலாம்!


கார் வாங்குவதற்கான தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மட்டும் போக்குவரத்துக்காக காரைப் பயன்படுத்துவது... குடும்பத்தினரோடு வார இறுதி நாட்களில் நண்பர்கள் வீட்டுக்கு அல்லது அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவதற்கு... பிசினஸ் விஷயத்துக்காக அடிக்கடி வெளியூர் சென்று வருவதற்கு... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கின்றன. அந்தத் தேவைகளுக்கு ஏற்றபடி காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எப்போதுமே உடும்புப் பிடியாக ஒரு காரை மனதில் வைத்துக்கொண்டு இந்த காரையே வாங்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வராதீர்கள். உங்கள் தேவைகளைப் பொறுத்துத்தான் காரை வாங்க வேண்டும் இல்லையா? ஹேட்ச்பேக், பிரீமியம், செடான், எஸ்யூவி, எம்யூவி என சந்தையில் பல கார் வகைகள் இருப்பதால், எந்த கார் வாங்குவது என்று தீர்மானிப்பதற்கு முன்பு... எந்த வகை கார் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்.

ஹேட்ச்பேக் வகை

பொதுவாகச் சொன்னால், ஹேட்ச்பேக் என்பது செடான் கார்களுக்கு ஒரு படி சிறியது. அதேபோல, ஹேட்ச்பேக் என்றாலே ஐந்து கதவுகள் இருக்கும் என்பதும் பொது விதி. இந்த வகை கார்களில் பொதுவாக நான்கு பேர் வசதியாகப் பயணிக்கலாம். மைலேஜ், பராமரிப்பு, சர்வீஸ் செலவுகள் என அனைத்திலுமே அடக்கமான கார்கள் இவை.

விலை குறைவான கார்... விற்பனையில் வெளுத்து வாங்கும் கார் என்பதால், நம் நாட்டில் ஹேட்ச்பேக் கார்கள்தான் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இதில், ஒரு கார் மற்றொரு காரில் இருந்து வேறுபட வேண்டும் என்பதால் ஸ்டைலிலும், சிறப்பம்சங்களிலும் புதுப் புது விஷயங்களை கார் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்துகின்றன. இதனால் இதில் சாய்ஸ் அதிகம். இந்த மிகப் பெரிய ஹேட்ச்பேக் லிஸ்ட்டில் இருந்து ஒரு காரைத் தேர்ந்தெடுப்பதுதான் பெரிய சவால். ஹேட்ச்பேக் கார்களிலேயே விலையைப் பொருத்து ஸ்மால் பட்ஜெட் (2-3 லட்சம்), மீடியம் பட்ஜெட் (3-5 லட்சம்), ஹை-பட்ஜெட் (5-7 லட்சம்) என மூன்று விதமான விலையில் கார்கள் விற்பனைக்கு இருக்கின்றன.

செடான் வகை

இது முழுமையான கார். இதை 3 பாக்ஸ் டைப் என்றும் சொல்வார்கள். அதாவது இன்ஜின், கேபின், டிக்கி என்று இதில் 3 பாக்ஸ§கள் இருக்கும். ஐந்து பேர் தாராளமாக உட்கார்ந்து பயணிப்பதற்கு இந்த செடான் கார்கள் சரியாக இருக்கும். மனைவி, மகன், மகள்... என வீட்டில் உள்ள அனைவருமே விழாக்கள், கல்லூரி, அலுவலகம் என சொகுசாகவும், வசதியாகவும் சென்று வர இந்த கார்கள் சரியாக இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்களுக்கும் பிளான் போடலாம்! விலை ஏழு லட்சத்தில் இருந்து ஆரம்பமாகும்.

சொகுசு கார் வகை


நீங்கள் யார் என்பதை சமூகத்துக்கு எடுத்துக் காட்டி, இமேஜைக் கூட்டும் கார்கள் இவை. இந்த வகை கார்கள் ஸ்டைலிலும், வசதிகளிலும் பிரமிப்பை ஏற்படுத்துவது போலவே, விலையும் பிரமிப்பை வரவழைக்கும். உதிரி பாகங்கள், பராமரிப்பு போன்ற செலவுகளிலும் இது பர்ஸைப் பழுக்கவைக்கும். விலை ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்பவர்கள், சொகுசு கார்களின் லிஸ்ட்டை கையில் எடுத்துக் கொள்ளலாம்!


எம்யூவி கார் வகை

உங்கள் வீட்டில் ஐந்து பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கான கார் எம்யூவிதான். எம்யூவி கார்கள் என்றாலே ஸ்டைலில் சுமாராகத்தான் இருக்கும். அதனால், இதில் ஸ்டைலை எதிர்பார்க்க முடியாது. இவை முழுக்க முழுக்க பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும் கார்கள். பெரிய குடும்பங்களுக்கும், அடிக்கடி வெளியூர் டூர் செல்வதற்கும் இந்த கார்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வேகம், மைலேஜ் ஆகியவையும் கிட்டத்தட்ட எஸ்யூவி கார்களின் அளவுக்கு இருக்கும்.

எஸ்யூவி கார் வகை


சாலையில் மிரட்டலாக வலம் வர வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு எஸ்யூவி கார்கள்தான் ஒரே சாய்ஸ். எந்த மாதிரி சாலையாக இருந்தாலும் சரி, காரில் ஏறிப் பறக்க வேண்டும் என்பவர்களுக்கு எஸ்யூவி கார்களில் இருக்கும் 4 வீல் டிரைவ் வசதி மிகவும் உதவியாக இருக்கும். மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு 4 வீல் டிரைவ் சிஸ்டம் நல்ல சாய்ஸ். எஸ்யூவி கார்களின் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும். ஆனால், மைலேஜ் குறைவாகத்தான் இருக்கும். எஸ்யூவி கார்களில் 5 பேர் முதல் 9 பேர் வரை பயணிக்கக்கூடிய அளவுக்கு இடவசதி உண்டு. மிகவும் உயரமானவர்கள், உடல் பருமனானவர்கள் என கிட்டத்தட்ட அனைவருக்குமே எஸ்யூவி கார்கள் சரியாக இருக்கும்.

கார் வாங்குபவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் கடன் வாங்கித்தான் கார் வாங்குகிறார்கள். அதனால், கார் கடனைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

கார் வாங்குவதற்கான முழுத் தொகையையும் கடனாகத் தரமாட்டார்கள். காரின் வகையைப் (ஹேட்ச்பேக், செடான்...) பொருத்து காரின் விலையில் 15-30 சதவிகிதத் தொகையை முன் பணமாகச் செலுத்த வேண்டியது இருக்கும். அதாவது, ஒருவர் மூன்றரை லட்ச ரூபாய் விலை கொண்ட சான்ட்ரோ காரை வாங்குகிறார் என்றால், அவர் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாயை முன் பணமாகச் செலுத்த வேண்டும். மீதித் தொகைக்குத்தான் கடன் கொடுப்பார்கள்.

பொதுவாக, முன் பணத்தை (Down Payment) எவ்வளவு அதிகமாகச் செலுத்த முடியுமோ, அவ்வளவு அதிகமாகச் செலுத்திவிடுவது நல்லது.

கார் கடனுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்துவிட்டால், அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் கார் கடன் கிடைத்துவிடும். வாங்கும் கடனை 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு மூலம் கார் லோன் வாங்குவதைத் தவிர்க்கவும். காரணம், இதில் வட்டி கூடுதலாக இருக்கும். மேலும், கடன் திருப்பிச் செலுத்தும் ஆண்டுகளையும் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைத்துக் கொள்வது நல்லது.

'ஜீரோ சதவிகித வட்டி' என விற்பனையில் மந்தமாக இருக்கும் கார்களுக்கு விளம்பரம் செய்வார்கள். இதில் உண்மையில்லை. இந்த கார்களுக்கு அதிகமான தொகையை முன் பணமாகச் செலுத்த வேண்டியது இருக்கும். மேலும், கடன் தொகையையும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தச் சொல்வார்கள்.

எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதை தீர விசாரியுங்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் சர்வீஸ் வேகமாக இருக்காது. ஆனால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும். தனியார் வங்கிகளில் உடனடியாக கடனுக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆனால், சில இடங்களில் அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படும் நிலையும் இருக்கிறது. கடன் வாங்கும்போதே மறைமுகக் கட்டணங்கள் (Hidden Charges) எதுவும் இருக்கிறதா என்பதை நன்கு விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பழைய காருக்கும் கடன் தரப்படுகிறது. ஆனால், இதற்கான வட்டி விகிதம் புதிய கார்களைவிட 2 முதல் 4 சதவிகிதம் வரை அதிமாக இருக்கும். அதேபோல, மிகப் பழைய கார்களாக இருந்தால் அதற்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது. அதாவது, பொதுவாக ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்களாக இருந்தால் கடன் கிடைக்காது.

'சிறிய கார்கள்' என்பவை பட்ஜெட் கார்கள். 'பெரிய கார்கள்' என்பவை பாதுகாப்பான கார்கள். பெரிய கார்களில் செல்லும்போது ஏதாவது விபத்து ஏற்பட்டால், பாதிப்புகள் மிகக் குறைவாக இருக்கும்.

சிறிய கார்கள் என்றால், காருக்குள் இடவசதி குறைவாகத்தான் இருக்கும் என்று அர்த்தமில்லை. இப்போது புதிதாக வெளிவந்திருக்கும் ஹேட்ச்பேக் கார்களே பெரிய கார்களுக்கு இணையாக அதிக இடவசதியுடன் இருக்கின்றன.

என்னென்ன வசதிகள் வேண்டும்?

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் அதிகம் பயணிப்பவர்கள் மற்றும் ஆஃப் ரோடு ஆர்வலர்களைத் தவிர... 4 வீல் டிரைவ் சிஸ்டம் பலருக்குத் தேவைப்படாது. அதேபோல் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வேண்டுமா அல்லது மேனுவல் கியர் பாக்ஸ் வேண்டுமா என்பதையும் உங்கள் தேவையை வைத்து முடிவு செய்யுங்கள்.

எவ்வளவு பவர் வேண்டும்?

0-60, 0-100 போன்ற பர்ஃபாமென்ஸ் பட்டியலைப் பார்த்து அதிகமாக மயங்கத் தேவையில்லை. வேகமாகப் பறக்கக்கூடிய கார்களை வாங்கிவிட்டு, அதன் ஆக்ஸிலரேட்டரை முழுதும் மிதிக்கவே பயப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பறந்துகொண்டே இருப்பவர்கள்... கார் நிரம்பி வழியும் அளவுக்குப் பயணிகளோடு பயணப்படுகிறவர்கள் ஆகியவர்களைத் தவிர, சக்தி மிகுந்த இன்ஜின் கொண்ட கார்கள் பலருக்குத் தேவைப்படாது.

டீசல் கார் வாங்கலாமா? பெட்ரோல் கார் வாங்கலாமா?

வாரத்துக்கு 500 கி.மீ-க்கு மேல் பயணிப்பவர்களுக்கு டீசல் இன்ஜின் பொருத்தமானதாக இருக்கும். சிஆர்டிஐ, பம்ப் ட்யூஸ், டர்போ சார்ஜர்... என பல வகையான தொழில்நுட்பம் கொண்ட டீசல் இன்ஜின்கள் உள்ளன. பம்ப் டியூஸ் தொழில்நுட்பம் பிரீமியம் வகை கார்களில் மட்டுமே உள்ளது. பொதுவாக, சிஆர்டிஐ தொழில்நுட்பம் கொண்ட கார்களை வாங்குவதே நல்லது.

ஆனால், டீசல் கார்கள் பெட்ரோல் கார்களைவிட விலை சற்றே அதிகமாக இருக்கும். அதேபோல், பராமரிப்புச் செலவுகளும் கொஞ்சம் அதிகம்தான்.

பழைய காரா... புதிய காரா?

காரும், செல்போனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். வாங்கிய ஒரு ஆண்டுக்குள் அதன் மதிப்பு கணிசமாகக் குறைந்துவிடும். பழைய காரைப் பொறுத்தவரை மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ள கார்களை மட்டுமே வாங்குவது நல்லது. உதாரணமாக மாருதி ஸ்விஃப்ட், ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் சான்ட்ரோ ஆகிய கார்களை பழைய கார் மார்க்கெட்டில் வாங்கினாலும் அதன் மதிப்பு உடனே குறைந்துவிடாது. மேலும் இவற்றின் மைலேஜ், பராமரிப்பு, பர்ஃபாமென்ஸ் ஆகியவையும் சிறப்பாக இருக்கும். எவ்வளவு கி.மீ கார் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் பார்த்து வாங்க வேண்டும்.

3 ஆண்டுகளுக்குள் ஓடிய காரை வாங்குவதே சிறந்தது. இல்லாவிட்டால் புதிய காரை வாங்கிவிடுவதே நல்லது. விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக பழைய காரை வாங்கினால், அதன் பராமரிப்புச் செலவுகள் புதிய கார் வாங்குவதைவிட அதிகமாக இருக்கும்.

புதிய கார் வாங்கும்போது இலவச இன்ஷூரன்ஸ், குறைந்த வட்டியில் கடனுதவி என பல சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பட்ஜெட் எவ்வளவு?

நீங்கள் எவ்வளவு பட்ஜெட் வைத்திருக்கிறீர்களோ அதற்கு ஏற்றபடி எந்த காரை வாங்குவது என்று திட்டமிடுங்கள். கார் வாங்கும்போது இருக்கும் விலையை மட்டும் பார்க்காமல் சர்வீஸ் செலவுகள், மாதந்தோறும் பெட்ரோலுக்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டியது இருக்கும், ஆண்டுக்கு ஒருமுறை இன்ஷூரன்ஸ் எவ்வளவு என்பது போன்ற செலவுகளையும் கணக்கில் கொள்ளுங்கள்.

எங்கே வாங்குவது?

காரை முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அடுத்து எங்கே வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதிக டிஸ்கவுண்ட் கொடுக்கும் டீலர்களை மட்டுமே நம்பிப் போகாதீர்கள். கஸ்டமர் சர்வீஸ், கார் உடனடியாக டெலிவரி தருவது என அனைத்து சேவைகளையும் தரமாக வழங்குபவர்களிடம் காரை வாங்குவதே நல்லது.

டீலர் சொல்வது:

''காரை உடனே புக் பண்ணுங்க சார். இன்றுடன் இந்த ஆஃபர் முடிவடைகிறது!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''பரவாயில்லை. நாளைக்கு வருகிறேன்!''

இப்போது கார்களின் விற்பனை மந்தமாக இருப்பதால், ஷோரூமுக்குள் நுழைகிற எவரும் கார் வாங்காமல் திரும்பிப் போய்விடக் கூடாது என்பதில் டீலர்கள் கவனமாக இருக்கிறார்கள். இதனால், கார் பற்றி நீங்கள் சும்மா விசாரிக்கச் சென்றால்கூட எப்படியாவது உங்களை கார் வாங்க வைத்துவிட முடியுமா என்பதில்தான் கவனமாக இருப்பார்கள். ஷோரூமுக்குள் சென்றவுடன் காரைப் பற்றி விசாரியுங்கள். என்னென்ன ஆஃபர்களை அவர்கள் சொல்கிறார்கள்... என்னென்ன உதிரி பாகங்கள் ஆஃபருடன் தரப்படுகின்றன என்பதையெல்லாம் விசாரித்துவிட்டு, 'நாளைக்கு வருகிறேன்!' என்று சொல்லிவிட்டு வந்து விடுங்கள்.

சேல்ஸ்மேன் சொல்வது: ''என் மேனேஜரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''என் மனைவியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்!''

சேல்ஸ்மேன் சொல்வதைவிட நீங்கள் அதிக ஆஃபர் கேட்டாலோ, அல்லது அக்ஸஸரீஸ் இலவசமாக வேண்டும் என்று எதைக் கேட்டாலும் சேல்ஸ்மேன்கள், ''சார், மேனேஜர்கிட்டப் பேசிட்டுச் சொல்றேன்'' என்பதையே பதிலாகச் சொல்வார்கள். மேனேஜரை கறாரான ஆசாமி போலவும், உங்களிடம் பழகும் சேல்ஸ்மேன் உங்களுக்காகப் பரிந்து பேசுகிறவர் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டு இருக்கும் விற்பனைத் தந்திரம். மேனேஜரிடம் பேசிவிட்டு மீண்டும் சேல்ஸ்மேன் சொல்லும் டிஸ்கவுண்டைக் கேட்டு அசந்துவிடாதீர்கள். அவர்கள் சொல்லும் டிஸ்கவுண்ட் சரியானதுதானா என்பதை மற்ற டீலர்களிடம் விசாரித்துவிட்டு முடிவெடுங்கள். அவர்களது டெக்னிக்கையே நீங்களும் பயன்படுத்துங்கள். வீட்டில் மனைவியைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன். அம்மா - அப்பாவைக் கேட்டுவிட்டு பிறகு சொல்கிறேன் என்பதையே பதிலாகச் சொல்லுங்கள்.

சேல்ஸ்மேன் சொல்வது: ''சார் உங்களுக்காகத்தான் இவ்வளவு டிஸ்கவுண்ட்!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''மற்ற டீலர்கள் இதைவிட அதிக டிஸ்கவுண்ட் தருகிறார்கள்!''

சேல்ஸ்மேன், ''உங்களுக்காகத்தான் இவ்வளவு டிஸ்கவுண்ட் கொடுக்கிறோம் சார்!'' என்று சொல்வார்கள். அதை நம்பிவிடாதீர்கள். மற்ற டீலர்கள் எவ்வளவு டிஸ்கவுண்ட் தருகிறார்கள், அவர்கள் கொடுக்கும் உதிரி பாகங்கள் என்னென்ன என்பது உள்பட அத்தனை விவரங்களும் உங்களுக்குத் தெரியும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

சேல்ஸ்மேன் சொல்வது: ''இதில் எங்களுக்கு லாபமே இல்லை!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''நான்தான் பணம் கொடுக்கிறேன். நீங்கள் அல்ல!''

நீங்கள் சொல்லும் 'டீலில்' லாபமே இல்லை என்ற தோற்றத்தை சேல்ஸ்மேன் ஏற்படுத்துவார். லாபம் இல்லாமல் எந்த டீலருமே வியாபாரம் செய்யமாட்டார்கள். மேலும், கார் வாங்க பணம் கொடுப்பவர்கள் நீங்கள்தான். 3 லட்ச ரூபாய் காரில் மூவாயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுப்பதால் டீலர்கள் நஷ்டமடைந்து விடமாட்டார்கள்.

சேல்ஸ்மேன் சொல்வது: ''காருக்கு செம டிமாண்ட். புக்கிங் அதிகமாக இருக்கிறது!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''அந்த டீலர் உடனே டெலிவரி தருவதாகச் சொல்லியிருக்கிறார்!''

உடனே நீங்கள் காரை புக் செய்துவிட வேண்டும் என்பதற்காக அதிக டிமாண்ட் இருப்பதுபோலவும், ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்குவதற்காக வரிசையில் நிற்பதுபோலவும் படம் காட்டுவார் சேல்ஸ்மேன். கவனமாக இருங்கள்... நீங்கள் வாங்கப்போகும் காருக்கு மார்க்கெட்டில் என்ன டிமாண்ட் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வெவ்வேறு டீலர்களிடம் விசாரித்து முடிவெடுங்கள்.

எந்த காரை வாங்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்த உடன், அந்த காரை அவசியம் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.!

வசதியாக உட்கார முடிகிறதா?

காரில் வசதியாக உட்கார முடிகிறதா, இருக்கை மற்றும் ஸ்டீயரிங் நம் வசதிக்கேற்ப இருக்கிறதா, பெடல்கள் சரியான இடத்தில் இருக்கிறதா, தலை மேற்கூரையில் இடிக்காத வகையில் ஹெட்ரூம் இருக்கிறதா, கால்களை நீட்டி மடக்கி உட்கார முடிகிறதா என்று பாருங்கள்.

எல்லா சாலைகளிலும் ஓட்ட முடிகிறதா?

அகலமான, குறுகலான, குண்டும் குழியுமான, நெரிசலான என அனைத்து வகையான சாலைகளிலும் காரை ஓட்டிப் பாருங்கள். காரை ஓட்டும்போது உங்கள் கவனத்தை கார் ஓட்டுவதில் மட்டும் செலுத்துங்கள். சேல்ஸ்மேன்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். அவர்கள் காரில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கலாம்.

கியர்களை சுலபமாக மாற்ற முடிகிறதா?

சடன் பிரேக் அடித்துப் பாருங்கள். ஏபிஎஸ் பிரேக்ஸ் இருந்தால், அது சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள். எல்லா கியரிலும் வேகமாக ஆக்ஸிலரேஷன் கொடுத்துப் பாருங்கள். கியர்களைச் சுலபமாக மாற்ற முடிகிறதா என்றும் பாருங்கள்.

மியூஸிக் சிஸ்டம் வேலை செய்கிறதா?

பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங், மியூஸிக் சிஸ்டம், ஏ.ஸி ஆகிய அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் சோதியுங்கள். மேலும், இப்போது வருகின்ற கார்களில் ஸ்டீயரிங் வீலிலேயே மியூஸிக் கன்ட்ரோல் கொடுக்கப்படுகின்றன. இது ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். கைவசம் 'பென் டிரைவ்' இருந்தால் யுஎஸ்பி போர்ட் வேலை செய்கிறதா என்றும் பாருங்கள்.

குடும்பத்தோடு டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள்!

டெஸ்ட் டிரைவ் செய்யும்போதே குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களையும் அப்போதே தெரிந்துகொள்ளலாம்.

டிக்கியில் இடம் இருக்கிறதா?

காபி கப், தண்ணீர் பாட்டில், பேப்பர் போன்ற பொருட்கள் வைக்க காருக்குள்ளே இடம் இருக்கிறதா என்று பாருங்கள். டிக்கியிலும் போதுமான இடம் இருக்கிறதா என்றும் பாருங்கள்.

டிஸ்கவுண்ட் எவ்வளவு?

கார் உங்களுக்கு முழுவதும் பிடித்துவிட்டதென்றால் டிஸ்கவுண்ட், என்னென்ன உதிரி பாகங்கள் வேண்டும் என அனைத்தையும் டீலரிடம் சொல்லி இறுதியாக டீலை முடியுங்கள்.

பகலில் காரை டெலிவரி எடுப்பதே நல்லது. இருட்டான சமயத்தில் காரை டெலிவரி எடுக்கும்போது, காரில் ஏதாவது அடிபட்டிருந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

காரைச் சுற்றிலும் பாடி பேனல்களையும், கண்ணாடிகளையும் சோதனை செய்யுங்கள். காரின் கார்னர்களைக் கவனமாகப் பாருங்கள்.

காரை டெலிவரி எடுக்கும் முன் அதில் ஏதாவது ரிப்பேர் செய்யப்பட்டு இருக்கிறதா என்று கேளுங்கள். ஏனென்றால், புது கார் என்றாலும் ஃபேக்டரியில் இருந்தோ அல்லது டீலரின் 'யார்ட்'டில் இருந்தோ காரைக் கொண்டு வரும்போது காரில் ஏதாவது அடிபட்டு சரிசெய்யப்பட்டு இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், ரிஜிஸ்ட்ரேஷன் கொண்டு போகும்போதும் இதுபோல் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏதாவது அடிபட்டு சரி செய்யப்பட்டு இருந்தால், அதை டெலிவரி நோட்டில் எழுதி விற்பனை மேலாளரிடம் காரில் எங்கு அடிபட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு, அதை டீலரிடம் கொடுத்து சரி செய்துவிடுங்கள்.

காரின் உள்ளே டேஷ் போர்டும், ஃபேப்ரிக்ஸ§ம் ஒன்றாக இயைந்து இருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால், சில நேரங்களில் காரின் டேஷ் போர்டும், ஃபேப்ரிக்ஸ§ம் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். அப்படி இருந்தால் அது தயாரிப்பாளரின் குறைபாடு. அதைச் சரி செய்து கொடுக்கச் சொல்லிவிடுங்கள்.

காரில் நீங்கள் கூடுதலாகக் கேட்ட 'அக்ஸஸரிஸ்' அனைத்தும் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் டெலிவரி எடுக்கும்போது 'ஃபுல் டேங்க்' பெட்ரோல் கேட்டிருந்தால், அது நிரப்பப்பட்டு இருக்கிறதா என்றும் பாருங்கள்.

காரில் PDI (Pre Delivery Inspection) ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சர்வீஸ் புக்கிலும் இதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறதா என்றும் பாருங்கள்.

செக் லிஸ்டில் உள்ளபடி அனைத்து ஆவணங்களையும், பொருட்களையும் பெற்றுக் கொண்ட பிறகே ஒப்புதல் கையெழுத்தை இடுங்கள்.

காரை டெலிவரி எடுக்கும் முன்பு சேல்ஸ்மேனிடம் பூட்டைத் திறப்பது எப்படி, ஏ.ஸி சுவிட்ச், அலார்ம் சிக்னல்கள் என காருக்குள் இருக்கும் விஷயங்களை ஒரு முறைக்கு இரண்டு முறை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

கடைசியாக காரை டெலிவரி எடுக்கும் முன் இன்ஷூரன்ஸ் பேப்பர்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இன்ஷூரன்ஸ் பேப்பரில் இன்ஜின் எண் மற்றும் சேஸி எண் சரியாகக் குறிக்கப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால், முதல் முறை இன்ஷூரன்ஸ் செய்யும்போது காரின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் இருக்காது என்பதால், இவை அனைத்தும் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது அவசியம்!

கார் வாங்கிவிட்டோம், ஆறு மாதம் கழித்துத்தான் சர்வீஸ் என்பதற்காக அமைதியாக இருந்துவிடக் கூடாது. காரைப் பொறுத்தவரை தொடர்ந்து அதைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கார் வாங்கிய உடனே பவர் ஸ்டீயரிங், மியூஸிக் சிஸ்டம் அல்லது பவர் விண்டோஸ் என ஏதாவது ஒன்று வேலை செய்யவில்லை என்றாலும், சர்வீஸ் செய்யும்போது பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியம் காட்டாதீர்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் வாரன்டி இருக்கும்போது தனியார் மெக்கானிக்குகளிடம் சர்வீஸ் செய்யாதீர்கள். இப்படிச் செய்தால், காரில் பிரச்னை என்று வரும்போது வாரன்டி செல்லுபடி ஆகாது என டீலர்கள் ஈஸியாக நழுவி விடுவார்கள்.

கார் தயாரிப்பாளர் பட்டியலிட்டுள்ளதுபோல சீரான இடைவெளிகளில் காரை சர்வீஸ் செய்யுங்கள்.

ஹெட் லைட், டெயில் லைட் என அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என்றும் பாருங்கள்.

டயரில் உள்ள காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது நிச்சயம் சரி பாருங்கள். ஸ்பேர் டயரிலும் காற்றைச் சரியாக அடைத்து வைத்திருப்பது அவசியம்.

விண்ட் ஸ்கிரீன் வாஷர், கூலன்ட், ஆயில், பிரேக் ஃப்ளூயிட் என அனைத்துமே சரியான அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்!

நன்றி மோட்டார் விகடன் ....