திருச்சிற்றம்பலம்! இதைச் சொல்லும்போதே நம் நினைவுக்கு வருவது சிதம்பரம். 'ஏடு தந்த தில்லையம்பதி' என தேவாரப் பாடல்கள் கிடைத்த தலம் இது எனப் போற்றுவர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தை எண்ணும்போதே, தனித்தீவென இருக்கும் பிச்சாவரமும், அங்கே உள்ள படகுப் பயணமும் நினைவில் நிழலாடும்!

தெற்கே வெள்ளந்தாங்கி அம்மன், மேற்கில் எல்லை அம்மன், வடக்கே தில்லைக்காளி, கிழக்கில் மாரியம்மன் ஆகியோர் நாற்புறமும் இருந்து சிதம்பரத்தைக் காப்பதாக ஐதீகம். சிதம்பரத்தில் குடிகொண்டிருக்கும் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜரையும் அவரின் அழகுத் திருமேனியையும் தரிசிக்காதவர்கள் மிகக் குறைவு! ஓங்கி உயர்ந்த கோபுரம்; பிரமாண்ட மண்டபங்கள்; நீண்ட பிராகாரங்கள் என காலங்கள் பல கடந்தும், கம்பீரமாக நிற்கும் ஆலயம்!
குங்குமத்தில் ஜொலிக்கும் தில்லைக்காளி!

நடனத்தில் நடராஜபெருமானிடம் தோற்றுப்போன காளி தேவி, இங்கே தில்லைக்காளியாக கோயில்கொண்டு இருக்கிறாள். நடராஜர் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள அழகிய ஆலயம். இங்கு காளிதேவிக்கு நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வர். வேறு எந்த அபிஷேகமும் இல்லை. அபிஷேகம் முடிந்து, குங்குமக் காப்பில் அம்மனைக் காண கண்கோடி வேண்டும்.

இளமையாக்கினார்! கோயில்

ஸ்ரீநடராஜர் கோயிலின் மேற்கில், திருநீலகண்ட நாயனாருக்கு இளமையைத் தந்தருளிய சிவாலயம் அமைந்துள்ளது. இளமையாக்கினார் கோயில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்! கோயிலையும் தீர்த்தக் குளத்தையும் பார்த்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். இங்கே வந்து, சிவனாரை வழிபட, தீராத நோயும் தீரும்; நீண்ட காலம் தேக ஆரோக்கியத்துடன் இளமை மாறாமல் வாழலாம் என்பது ஐதீகம்!

ஸ்ரீஅனந்தீஸ்வரா! கோயில்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைச் சுற்றியுள்ள கோயில்களில் ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயமும் ஒன்று. தெற்கு நோக்கி அமைந்துள்ள அழகிய கோயில்; ஆவுடையார்கோயிலைப் போன்ற அமைப்பைக் கொண்ட தலம்; ஸ்ரீபதஞ்சலி முனிவர் வழிபட்ட சிவாலயம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

கீழ தெரு மாரியம்மன் கோயில்

ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு தென் கிழக்கில், கீழத்தெருவில், பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக் கோயில். இவளை தரிசித்து வழிபட, இழந்த பதவியைப் பெறலாம்; நிம்மதியுடன் வாழலாம் என்று சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீராகவேந்திரா கோயில்!

சிதம்பரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது புவனகிரி. ஸ்ரீராகவேந்திரர் அவதரித்த பூமி என்பர். இங்கே, இவருக்கு அழகானதொரு ஆலயமும் உள்ளது.

சிதம்பரத்துக்கு மிக அருகில் உள்ளது வீராணம் ஏரி. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாரையூர். நாரைப் பறவை சிவனாரை பூஜித்து அருள்பெற்ற தலம்; நம்பியாண்டார் நம்பி அவதரித்த ஊர்; முக்கியமாக, பொள்ளாப்பிள்ளையார் அருள்பாலிக்கும் அழகிய ஆலயம் எனப் பெருமைகள் பல கொண்ட இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்- ஸ்ரீசௌந்தரேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீதிரிபுரசுந்தரி.

திருநாரையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுமன்னார்கோவில். இங்கு ஸ்ரீமரகதவல்லித் தாயார் சமேதராக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவீரநாராயண பெருமாள். இதனால் இந்தப் பகுதி, வீரநாராயணபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும், வீரநாராயணம் ஏரி என்பதே காலப் போக்கில் வீராணம் ஏரி என்று மருவியதாகவும் சொல்வர்.

காட்டுமன்னார்கோவிலில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருஓமம்புலியூர். இங்கு துயர்தீர்த்தநாதராக சிவபெருமானும், புஷ்பாம்பிகையாக அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.


இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கடம்பூர். கோயிலே தேர்போன்று காட்சி தரும் நுட்ப பிரமாண்டத்தைக் கண்டு ரசிக்கலாம். இங்கே குடிகொண்டிருக்கும் இறைவன் - ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர். பிரதோஷ நாயகனாம் சிவனார், நந்தியின் மேல் நாட்டியம் ஆடும் கோலம், ஆலயத்தின் மற்றொரு சிறப்பு.

திருக்கடம்பூரில் இருந்து சிதம்பரம் வந்தடைந்து, அங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் பயணித்தால் பரங்கிப்பேட்டையை அடையலாம். இங்குதான் மகா அவதார் பாபாஜிக்கு ஆலயம் உள்ளது. இவரை வணங்கி வழிபட்டால், யோகமும் ஞானமும் கிடைக்கும் என்கின் றனர் பக்தர்கள். தவிர, சித்ரகுப்தர் வழிபட்டு அருள் பெற்ற, ஸ்ரீஆதிமூலேஸ்வரர் திருக்கோயிலும் இங்கு அமைந்துள்ளது. சித்ரகுப்தருக்கு தனிச் சந்நிதி உள்ளது.

பிச்சாவரத்தில் படகுப் பயணத்தை அனுபவிப்பதோடு, அப்படியே சிதம்பரத்தைச் சுற்றியுள்ள தலங்களுக்கும் ஆன்மிகப் பயணம் செய்யுங்கள். உள்ளம் புத்துணர்வு பெறும்; ஆன்மா புண்ணியம் பெறும்!


நன்றி - பக்தி விகடன்