மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு புதிய சம்பள விகிதம் அறிவிக்கபட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்கும் வகையில் குழு ஒன்றை அறிவித்தது. இக்குழுவினர் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கருத்தை கேட்டனர்.

குழு அறிக்கை தர தாமதமானதால் 3 மாத இடைக்கால நிலுவை (ஐ.ஆர்.,) தொகையை அரசு ஜனவரியில் வழங்கியது. குழு அறிக்கை தர 3 மாதம் காலம் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கால அவகாசம் கடந்த மே 19ல் முடிவடைந்தது. அறிக்கை தயார்: திட்டமிட்டபடி குழு தனது அறிக்கையை அரசிடம் தந்துள்ளதாகவும், முதல்வர் கருணாநிதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. டில்லியில் இருந்து முதல்வர் வந்தவுடனோ, அல்லது அவரது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதியிலோ புதிய சம்பள விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அரசு ஊழியர் சங்க பிரமுகர் ஒருவர் கூறுகையில்,"மே 19க்குள் குழு அறிக்கையை தராமல் இருந்திருந்தால் அக்குழுவின் கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருக்கும். இவ்வாறு உத்தரவு எதுவும் வெளியாகவில்லை. எனவே ஜூன் 3ற்குள் புதிய சம்பள உயர்வை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்,'என்றார்.