புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது எருக்கலக்கோட்டை கிராமம். இங்கு ஒரு மிகப்பெரிய அரசமரம் இருந்தது. அதற்கு அருகில் அரசுப் பள்ளி.

பள்ளியை விரிவுபடுத்த எட்டு மாதங்களுக்கு முன்பு அந்த அரச மரத்தின் மேல் பாகத்தில் 10 அடி உயரத்துக்கு வெட்டிவிட்டார்கள். அதோடு, பொக்லைன் இயந்திரம் வைத்து மரத்தின் அடி பாகத்தையும் பெயர்த்து வேருடன் கீழே சாய்த்துவிட்டனர்!

இது நடந்து எட்டு மாதங்களுக்குப் பின்பு கடந்த சனிபெயர்ச்சி அன்று இரவு, திடீரென்று பெரும் சத்தத்துடன்... அட, நம்புங்க... தானாகவே அந்த அரச மரம் மீண்டும் எழுந்து நின்றுவிட்டதாம்! சுற்றுப்புற ஊர்களில் இந்த மரத்தைப் பார்த்து மக்கள் கூடி அதிசயப் பரபரப்புக்கு அச்சாரம் போட... நாமும் அங்கு சென்றோம்.

மரம் எழுந்ததை(!) நேரில் பார்த் ததாகச் சொன்ன முருகேசன் நம்மிடம், ''அந்த

அரசமரம் இருந்த இடத்துல நாகம்மா சிலை இருந்துச்சு. அந்த மரத்துல ஐந்து தலை நாகம் மாதிரியான ஒரு வடிவம் இருக்கும். இருந்தாலும், எங்க ஊர் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியா உசத்தறதுக்காக, அந்த மரத்தை வெட்றதுக்கு ஊர்மக்கள் சம்மதிச்சோம்.

நாகம்மா சிலையை வேறொரு இடத்துக்கு மாத்திட்டு, பொக்லைன் வெச்சு மரத்தோட மேல் பாதியை வெட்டிக் கொண்டுபோய்ட்டாங்க. அடி பாகம் அப்புறப்படுத்தாம கிடந்துச்சு. இந்த நிலையில, சனிப்பெயர்ச்சி அன்னிக்கு ஒரு ஏழு மணியிருக்கும்... நான் மரத்துக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்னுட்டு இருந்தேன்.

அப்ப, திடீர்னு சங்கு ஊதுற மாதிரி ஒரு சத்தம்! பதறி திடுக்கிட்டு சத்தம் வந்த பக்கம் பாத்தேன்... அங்கே சாய்ஞ்ச மரம் நிமிர்ந்திருந்துச்சு! உடனே ஊர்ல போய் எல்லார்ட்டயும் சொன்னேன். அப்புறம்தான் 'நாகம்மாவே திரும்ப அந்த இடத்துக்கு வந்துட்டாள்'னு தெரிஞ்சுகிட்டோம். உடனே ஊர்ல உள்ள 70 குடும்பமும் சேர்ந்து பொங்கல் வெச்சுப் படையல் போட்டோம். சுத்துப்பட்டுலயிருந்து எல்லா ஜனங்களும் வந்து இந்த இடத்தை ஆச்சர்யமா பாத்துட்டுப் போறாங்க..!'' என்று ஆச்சர்யம் விலகாமல் சொன்னார்.''இது சாத்தியமா?'' என்று கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் தியாகராஜனிடம் கேட்டோம்...நிமிர்ந்த மரத்தின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவர், ''மரத்தின் அடி வேர் பகுதியில் அதிகளவில் மண் உள்ளது. மரமும் முக்கால்வாசி தான் சாய்ந்துள்ளது. மரத்தை வெட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் வைத்து மரத்தைச் சுற்றி குழிபறித்து, பிறகு மரத்தை சாய்த்துள்ளனர். மரத்தின் வேர் பகுதியில் அதிக எடையுடன் மண்பிடிப்பு இருந்ததால், அது பூமியில் கீழேயிறங்கி, மரம் மறுபடி மேலே எழ மிக அபூர்வமாக வாய்ப்புள்ளது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எப்படி எந்த நிலையில் வைத்தாலும் மீண்டும் அதே நிலைக்கு வருகிறதோ அப்படித்தான் இந்த மரமும் எழுந்துள்ளது. அதற்கு காரணம் மைய ஈர்ப்பு விசை. மற்றபடி, மரம் தானாகவே நிமிர்ந்திருந்தாலும் அதற்கு அற்புத சக்தி என்றெல்லாம் சொல்வது மூடநம்பிக்கை!'' என்றார்.

எந்த ஈர்ப்பு சக்தியாக இருந்தாலென்ன... எருக்கலக்கோட்டையின் அந்த பாதி அரச மரம் இப்போது மக்கள் புண்ணியத்தில் மஞ்சள் துணி சுற்றிக்கொண்டு, புத்தம்புது உண்டியலில் காணிக்கை ஈர்க்க ஆரம்பித்துவிட்டது!


நன்றி
ஜூ.வி